Monday, March 26, 2012

ஜப்பான் சுனாமியால் அலைக்கழிக்கப்பட்ட படகு கனடாவில் கரை ஒதுங்கியது

ஜப்பானில் கடந்தாண்டு மார்ச் மாதம் 11ம் திகதி ஏற்பட்ட சுனாமியால் அலைக்கழிக்கப்பட்ட படகு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கரை ஒதுங்கியது.
சார்லட் அரசியார் தீவு என்றழைக்கப்பட்ட ஹைதா கிவாயி தீவின் தென்முனையில் 140 மைல் தொலைவில் இந்த படகை மத்திய அரசின் விமானப்படை கண்டுபிடித்தது.
இந்தப்படகு ஜப்பான் நாட்டின் ஹொக்கைதோ தீவைச் சேர்ந்ததாகும். இது மெல்ல மெல்ல அசைந்து காற்றின் போக்கில் கனடா வந்து சேர்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கர்ட்டிஸ் எபெஸ்மேயர் என்ற கடலறிஞர் கூறுகையில் இந்தப் படகில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை. இருப்பினும் திடீரென்று இந்தப் படகு செயல்பட ஆரம்பிக்கலாம். எனவே அந்தப் பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு இந்தப் படகினால் விபத்து ஏற்படக்கூடாது என்பதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

9.0 ரிக்டர் என்றளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின் அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதனால் சுமார் 5 மில்லியன் டன் குப்பைகள் கடலில் வந்து குவிந்தன.

19000 பேர் இறந்து போயினர். இந்தக் குப்பைகள் பசிபிக் கடலின் வழியாக வடக்கு அமெரிக்கக் கடற்கரையைச் சென்று சேரும் என்று விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்குக்கரையில் பிளாஸ்டிக் பாட்டில் முதல் குழந்தைகளின் உடை கழிவு உடுப்புகளும் சிதறிக் கிடந்தன. இவற்றில் இருந்த ஜப்பானிய வியாபார முத்திரைகளை வைத்து இவை சுனாமியால் அலைக்கழிக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.

சுற்றுப்புறச் சூழல் விஞ்ஞானி மெனாஸ் கஃபட்டோஸ் கூறுகையில் கடற்கரையில் ஒதுங்கியவை வெறும் குப்பை தான் என்றாலும் இவை சுற்றுப்புறச் சூழலுக்கும் கடலின் உயிர்களுக்கும் தீமை ஏற்படுத்துவதாகும் என்றார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls