Wednesday, March 28, 2012

ஆஸி.க்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் கடற்படை தளம் அமைக்கிறது அமெரிக்கா

இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலி யாவுக்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமைக்க அந்நாடு அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆஸ்திரேலியா பயணத்தின் போது இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன் ஆஸ்திரேலியாவின் டார்வின் தீவில் அமெரிக்க படைகளை நிலைநிறுத்தவும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான காக்கோஸ் தீவில் பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது.

ஆளில்லா வேவு விமானங்கள்

கோக்கோஸ் தீவிலிருந்து நவீன வேவுவிமானங்களை அமெரிக்கா பறக்கவிட திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா பல வகையான ஆளில்லா வேவு விமானங்களை வடிவத்திலும் திறனிலும் தம் வசம் வைத்துள்ளது. 40 ஆயிரம் அடி உயரத்தில் 20 மணிநேரம் தொடர்ந்து பறந்து வேவு பார்க்கக் கூடிய இஸ்ரேலிய தயாரிப்பான ஈடன் ஆளில்லா வேவு விமானமும் இதில் அடக்கம்.

நானோ ஹம்மிங்பேர்டு என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் பார்ப்பதற்கு உண்மையான ஹம்மிங்பேர்ட் பறவையைப் போலவே இருக்கும். 6.5 இஞ்ச் இறக்கை கொண்ட இந்த விமானம் பேட்டரி உதவியுடன் 8 நிமிடங்கள் வானில் பறந்து திரும்பும்.

பிரிடேடர் பி ஆளில்லா வேவு விமானங்களானது 66 அடி நீள இறக்கைகளைக் கொண்டது. இவை 50 ஆயிரம் அடி உயரத்தில் 30 மணிநேரம் தொடர்ந்து இயங்கி வேவு தகவல்களை சேகரிக்கும்.

இவை தவிர ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்படக் கூடிய வழக்கமான ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா வேவு விமானங்களும் உண்டு. ஆப்கானிஸ்தானில் 289 தாக்குதல்களை இதுவரை நடத்தி 2224 தலிபான் அல்குவைதா தலைவர்களை படுகொலை செய்ய இவையே பயன்படுத்தப்பட்டன.

இவை அனைத்தையும் கோக்கோஸ் தீவில் களமிறக்கினால் தென்கிழக்காசிய நாடுகள் முழுவதுமே அமெரிக்காவின் கண்காணிப்பில்தான் இருக்கும்.

இடம்பெயரும் டிகாகோ கார்சியோ

இந்தியப் பெருங்கடலில் டிகாகோ கார்சியோ தீவில் அமெரிக்கா கடற்படைத் தளத்தை ஏற்கெனவே அமைத்திருக்கிறது. இத்தீவுக்கான குத்தகை உரிமையை 50 ஆண்டுகாலத்துக்கு இங்கிலாந்திடமிருந்து அமெரிக்கா பெற்றிருந்தது. இந்த ஒப்பந்தம் எதிர்வரும் 2016-ம் ஆண்டு முடிவுக்கு வருகிறது.

இதனால் இந்தியப் பெருங்கடலில் தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றையும் கண்காணிக்கக் கூடிய வகையில் சீனாவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் கோக்கோஸ் தீவுக்கு டிகாகோ கார்சியோ தீவு கடற்படை தளத்தை ஒட்டுமொத்தமாக இடம்பெயரவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிர்ச்சியில் சீனா

ஒபாமா பயணத்தின் போது அமெரிக்க படைகள் ஆஸ்திரேலியாவில் குவிக்கப்படும் என்ற நிலைப்பாட்டுக்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சீனா உரிமைகோரி வரும் எண்ணெய்வளம் மிக்க தென்சீனக் கடலை எளிதில் கண்காணிக்கக் கூடிய கோக்கோஸ் தீவில் கடற்படை தளத்தை அமைக்க முடிவு செய்திருப்பது சீனாவிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்சீனக் கடலில் ஏராளமான தீவுகளுக்கு ஆசியான் நாடுகளான புருனே பிலிப்பைன்ஸ் மலேசியா வியட்நாம் போன்றவை உரிமை கொண்டாடி வருகின்றன.

வியட்நம் அரசின் ஒத்துழைப்புடன் தென்சீனக் கடலில் இந்தியா எண்ணெய் அகழாய்வுப் பணியில் ஈடுபட தொடர்ந்து சீனா எச்சரித்து வரும் நிலையில் அமெரிக்காவும் தென்சீனக் கடலை முற்றுகையிட்டு நிற்க உள்ளது.

மேலும் வளைகுடா நாடுகளிலிருந்து சீனாவுக்கு எண்ணெய் எரிபொருள் கொண்டுவரப்படும் மிக முக்கியமான மலாக்கா ஜலசந்தியை கோக்கோஸ் தீவிலிருந்து போர்க் கப்பல்கள் எளிதில் சென்றுவிட முடியும்.

எதிர்காலத்தில் இந்தியா-சீனா அல்லது அமெரிக்கா-சீனா இடையே ஒரு போர் அல்லது பதற்ற நிலை உருவானால் மலாக்கா ஜலசந்தியை போர்க்கப்பல்கள் வழிமறித்தாலே சீனாவுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் வகையில் பூகோள முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவின் நிலை

சர்வதேச அரங்கில் இந்தியா இனி அமெரிக்காவின் நட்புநாடாகத்தான் திகழவேண்டிய நிலை உருவாகிவிட்டது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் அமைப்பில் இந்தியாவை சேர்க்க வேண்டும் என்ற விவாதத்தை அமெரிக்கா தொடங்கி வைத்திருக்கிறது.

நேட்டோ அமைப்பில் இந்தியா இணைந்தால் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் சீனாவுக்கு கடும் சவாலாக இரண்டு நாட்டு படைகளும் இணைந்து நிற்க வேண்டிய நிலைமை உருவாகும்.

அமெரிக்கா தற்போது முகாமிட உள்ள கோக்கோஸ் தீவு அந்தமான் தீவுகளுக்கு சற்று கீழே உள்ளவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கோக்கோஸ் தீவில் முகாமிடுவதன் மூலம் இந்தியாஇசீனா ஆகிய இருநாட்டு கடற்படை செயற்பாடுகளை முழுவதுமாக அமெரிக்கா வேவு பார்க்கும்.

ஹோர்முஸ்-மலாக்கா ஜலசந்திகள்

வளைகுடா பிரதேசத்தில் ஈரானுக்குச் சொந்தமான ஹோர்முஸ் ஜலசந்தியைத்தாண்டிதான் அரபிக் கடலுக்கோ பெர்சிய வளைகுடாவுக்கோ செங்கடலுக்கு எண்ணெய் எரிபொருள் கப்பல்கள் செல்ல முடியும்.

இதேபோல் தென்கிழக்காசிய நாடுகளும் மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான மலாக்கா ஜலசந்தியைத்தாண்டித்தான் எண்ணெய் எரிபொருள் கப்பல்களை நகர்த்த முடியும்.

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டி வருவதால் அங்கு போர்மேகம் சூழ்ந்து அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நிற்கின்றன. இங்கிலாந்தும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்பப் போவதாக அறிவித்துள்ளன.

மலாக்கா ஜலசந்தி ஒட்டிய தென்சீனக் கடலில் சுற்றியிருக்கும் வியட்நாம் போன்ற சிறுசிறு நாடுகள் சீனாவை எதிர்த்து நிற்கின்றன. இப்பொழுது தம் பங்குக்கு அமெரிக்காவும்
களமிறங்கி நிற்கிறது.

3-ம் உலகப் போர் என்பது மூளுமேயானால் ஹோர்முஸ் ஜலசந்தியிலோ அல்லது மலாக்கா ஜலசந்தியை அண்மித்த தென்சீனக்கடலிலோதான் என்பது சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்து.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls