Tuesday, March 27, 2012

வடகொரியாவின் ரொக்கெட் சுட்டு வீழ்த்தப்படலாம் தென்கொரியா எச்சரிக்கை

தென்கொரியப் பிராந்தியத்தை மீறும் வடகொரியாவின் ரொக்கெட் சுட்டு வீழ்த்தப்படும் என தென்கொரியா எச்சரித்துள்ளது. சர்வதேச அணு சக்திப் பாதுகாப்பு மாநாட்டிற்காக சுமார் 60 தலைவர்கள் சியோலில் ஒன்று கூடியிருக்கும் வேளையிலயே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட தூர ஏவுகணை யொன்றின் உதவியுடன் செய்மதியொன்றை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக இம்மாத முற்பகுதியில் வடகொரியா அறிவித்ததை தொடர்ந்து அந்நாட்டின் மீதே அனைவரது கவனமும் குவிந்துள்ளது.
இத்திட்டம் அமைதியை நோக்காகக் கொண்டதென தெரிவித்திருக்கும் வடகொரியா புதிய மார்க்கமூடாக இவ் ஏவுகணைகள் ஏவப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இவ் ஏவுகணை தமது பிராந்தியத்தை மீறும் பட்சத்தில் அல்லது பிராந்தியத்தின் பக்கம் வரும் பட்சத்தில் அதனை சுட்டு வீழ்த்துவது குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள தென் கொரியப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஆத்திரமூட்டுவதும் அசட்டுத்தனமானதுமான இவ்வாறான  நடவடிக்கைகளுக்கு எம்மால் உதவ முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

ஏவுகணை ஏவப்படும் இடத்திற்கு ரொக்கெட்டின் பிரதான பாகம் நகர்த்தப்பட்டிருப்பதையும் ரொக்கெட்டை ஏவுவதற்கான தயார்ப் படுத்தல்களில் வடகொரியா ஈடுபட்டுள்ளதையும் வடகொரிய மற்றும் அமெரிக்க இராணுவத் தரப்பு அறிந்திருப்பதாகவும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவுடனான எல்லைப் பகுதிக் கிராமமொன்றுக்கு அருகில் வைத்தே இவ் ரொக்கெட் ஏவப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ் ரொக்கெட்டை ஏவும் நடவடிக்கைகளை உடனடியாக  நிறுத்துமாறு அமெரிக்க தென்கொரிய தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி  இதனை நிறுத்த வேண்டும் என சீனாவுக்கு ஒபாமா அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது 

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls