Monday, March 26, 2012

இலங்கைக்கு இந்தியா ஆதரவளித்திருந்தால் முடிவு மாறியிருக்கும்: அமைச்சர்கள் தினேஷ் சம்பிக்க விமல் லக்ஷ்மன் யாப்பா கருத்து

 ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால் அல்லது வாக்களிப்பில் கலந்துகொள்ளாது தவிர்த்திருந்தால் இறுதி முடிவு வித்தியாசமாக அமைந்திருக்கும் என அமைச்சர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எமது வெற்றிகரமான இராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் ஜெனீவாவில் உள்ள பல்வேறு இராஜதந்திரிகள் எமக்கு வரவேற்பளித்தனர். எனினும் பலம்மிக்க நாடுகளின் அழுத்தம் காரணமாக எமக்கு முன்னர் ஆதரவளித்த நாடுகள் இறுதியில் ஆதரவு வழங்கவில்லையென்றும் அமைச்சர்கள் கூறினார்கள்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 47 நாடுகள் பங்கெடுத்திருந்ததுடன் 24 வாக்குகளைப் பெற்று இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது.

பிரேரணையின் முக்கியத்துவத்தை விடுத்து அரசியல் நோக்கங்களு க்காகவே பல நாடுகள் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாக அரசாங்கத்தின் பிரதம கொரடாவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

மோதலுக்குப் பின்னர் இலங்கை முன்னெடுத்திருக்கும் பலதரப்பட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து பிரேரணையைக் கொண்டுவந்த நாடு கண்டுகொள்ளவில்லையா என்றும் அமைச்சர் கேள்வியெழுப்பி யுள்ளார்.

மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்ட அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் நாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றை இந்த நாடுகள் கவனத்தில்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்துள்ளன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. மொத்தமாக 23 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. 47 நாடுகளில் 23 நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சிறியதொரு வித்தியாசமே உள்ளது. இந்தியா பிரேரணைக்கு ஆதரவான நிலையை எடுத்திருக்காவிட்டால் அது வாக்கெடுப்பை சமப்படுத்தியிருக்கும். இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் பல்வேறு நாடுகளுடன் நீண்டகால மற்றும் குறுகியகால அடிப்படையில் நட்புறவுகளைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்கு பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை ஜெனீவாவில் தங்கியிருந்த இலங்கைக் குழுவினர் இறுதிநேரத்தில் கூட முயற்சியெடுத்திருந்த போதும் அமெரிக்கா மற்றும் மேலைத்தேய நாடுகள் தமது பொருளாதார ரீதியிலான செல்வாக்கைப் பயன்படுத்தி ஏனைய நாடுகளுக்கு எதிராக அழுத்தங்களைப் பிரயோகித் திருப்பதாக மின்சக்தி வலு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கூடுதலான அழுத்தம் காரணமாகவே பல நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலைக்குச் சென்றன. இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருக்காவிட் டால் பல நாடுகள் இந்தியாவைப் பின்பற்றியிருக்கும் என அறிக்கைகள் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் சர்வதேச நாடுகளுடன் இலங்கை எதிர்காலத்தில் உறவுகளைப் பலப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் கூறினார்.

அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பானது பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. அரசியல் ரீதியான கூட்டு மற்றும் இராஜதந்திர அரசியலை அடிப்படையாகக் கொண்டே வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது என பொருளாதார பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் சர்வதேச நாடுகள் மத்தியில் பிழையான தகவல்களை வழங்குவதற்கும் பிழையான அபிப்பிராயத்தை வழங்குவதற்கும் மனித உரிமைகள் பேரவையில் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பொறியியல் துறை அமைச்சர் விமல் வீரசன்ச; இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருப்பது எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் நாட்டு மக்களுக்கு அது மகிழ்ச்சியைத் தரவில்லை என்றார்.

ஒழிக்கப்பட்ட எல்.ரி.ரி.ஈ.யினருக்கு மீண்டும் ஒட்சிசன் வழங்குவதைப் போன்றே இச்செயற்பாடு அமைந்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls