Tuesday, April 3, 2012

மகாத்மாகாந்தி பயன்படுத்திய கண்ணாடி ராட்டை கடிதங்கள் இங்கிலாந்தில் ஏலம்!

மகாத்மாகாந்தி பயன்படுத்திய கண்ணாடி ராட்டை கடிதங்கள் ஆகியவை இங்கிலாந்தில் வரும் 17ம் தேதி ஏலத்தில் விடப்படுகிறது. இங்கிலாந்தில் மேற்கு மிட்லாண்ட் மாகாணத்தில் உள்ள செராப்ஷையரில் வரும் 17ம் தேதி உலகின் மிக பழமையான அரிய பொருட்கள் ஏலத்தில் விடப்படுகின்றன. முல்லாக் நிறுவனம் நடத்தும் இந்த ஏலத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய பல அரிய பொருட்கள் இடம் பெறுகின்றன.
காந்தி பயன்படுத்திய வட்ட பிரேம் கண்ணாடி ராட்டை அவரது மரணத்தின் போது அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண் ரத்தம் தோய்ந்த புல் ரங்கூனில் இருந்த ராகவன் என்பவருக்கு காந்தி எழுதிய கடிதம் உட்பட
அவரது பல்வேறு கடிதங்கள் குஜராத்தி மொழியில் உள்ள பிரார்த்தனை புத்தகம் ஆகியவை ஏலத்தில் விடப்படுகின்றன.

மண் மற்றும் ரத்தம் தோய்ந்த புல் ஆகியவற்றை பி.பி.நம்பியார் என்பவர் சேகரித்து வைத்திருக்கிறார். அந்த பொருட்களுடன் அவர் எழுதியுள்ள குறிப்பும் இடம் பெற்றுள்ளது.

'காந்தி கொல்லப்பட்ட இடத்தில் இருந்து மண் ரத்தம் தோய்ந்த புல் ஆகியவற்றை அப்பகுதியில் கிடந்த இந்தி பத்திரிகை தாளில் சேகரித்தேன். அதன்பின் அவற்றை நகைப்பெட்டியில் பாதுகாப்பாக வைத்து காத்து வருகிறேன்' என்று நம்பியார் குறிப்பிட்டிருக்கிறார்.

அதே போல் லண்டனில் 1890ம் ஆண்டில் காந்தி சட்டம் பயின்ற போது பயன்படுத்திய வட்ட பிரேம் கண்ணாடி லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த கண்ணாடி கிளவ்செஸ்டரில் உள்ள எச்.கன்னாம் ஆப்டிகல்சில் வாங்கப்பட்டதற்கான முத்திரை உள்ளதால் அது ஒரிஜனல் கண்ணாடி என்பதை சுட்டிக்காட்டுகிறது.

காந்தியின் பொருட்களுக்கு ஆரம்ப விலையாக 10000 முதல் 15000 பவுண்டு வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட அதிகமான ஆரம்ப விலை. காந்தியின் பொருட்கள் சுமார் ஒரு லட்சம் பவுண்டுகளுக்கு(ரூ.81 லட்சம்) ஏலம் போகும் என்று எதிர்பார்ப்பதாக முல்லாக் நிறுவனம் கூறியுள்ளது

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls