Wednesday, March 7, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி அதன் உறுப்பினர்களை உள்வாங்க அரசாங்கம் கடுமையாக முயற்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி அதன் உறுப்பினர்களை உள்வாங்க அரசாங்கம் கடுமையாக முயற்சித்து வருகின்றது. இந்த நிலையானது அரசியலுக்கு சாதகமாக அமைந்தாலும் நாட்டிற்கு பேராபத்தாகவே அமையும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
ஜெனீவா சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தவறான வியூகங்களை வகுத்து வருகின்றது. இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களில் இருந்து மீள கூட்டமைப்பினரின் உதவியை நாட நினைப்பது கோழியை பாதுகாக்க நரியிடம் கொடுத்ததைப் போன்ற விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக கலாநிதி குணதாச அமரசேகர தொடர்ந்தும் கூறுகையில்:

ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் கடுமையாக செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் முக்கிய காரணமாகும். தனி நாட்டுக் கொள்கையை அரசியல் ரீதியாக மேற்குலக சக்திகளின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள சம்பந்தன் குழு செயற்படுகின்றது. இந்த நிலையில் தற்போது அரசாங்கம் கூட்டமைப்பினரை இணைத்துக்கொண்டு ஜெனீவா பிரச்சினையை சமாளிக்க முடியும் என்று அரசு தவறான சிந்தனையில் செயற்படுகின்றது.

இதற்காக கூட்டமைப்பின் உறுப்பினர்களை எவ்வாறேனும் உள்வாங்க வேண்டும் என்ற போக்குடன் அரசாங்கம் செயற்படுகின்றது. இது நாட்டிற்கு ஒவ்வாத விடயமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டிற்கு நன்மைகளை பெற்றக் கொடுக்கும் என்று நம்ப முடியாது. ஏனெனில் நாட்டிற்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்களை மேற்கொள்ள மேற்குலக நாடுகள் முயற்சிக்கையில் இதற்கு மேலும் துணை போகும் நிலையில் கூட்டமைப்பு 47 நாடுகளுக்கு இலங்கைக்கு எதிராக செயற்படுமாறு கடிதம் எழுதி கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்தும் நாட்டிற்கு எதிராக செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசுடன் இணைத்துக்கொண்டு நாட்டை பாதுகாக்க முயற்சிப்பது முட்டாள்தனமாகும் என்றார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls