Tuesday, January 24, 2012

படகில் 10 ஆயிரம் கி.மீ. சென்று சாதனை உலகம் சுற்றிய சிறுமிக்கு உற்சாக வரவேற்பு!

ஹாலந்தை சேர்ந்த 16 வயது சிறுமி சாரா டெக்கர், பாய்மர படகில் தனியாக உலகை சுற்றி வந்து சாதனை படைத்திருக்கிறார். ஹாலந்தை சேர்ந்தவர் சாரா டெக்கர் (16). அப்பா டிக் டெக்கர், ஹாலந்துக்காரர். அம்மா பாப்ஸ் முல்லர் ஜெர்மனியை சேர்ந்தவர். இருவரும் கடல் பயணத்தில் ஆர்வம் கொண்டவர்கள். காதலித்து திருமணம் செய்தவர்கள் 7 ஆண்டு தொடர் கடல் பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில், நியூசிலாந்தின் வான்கரே துறைமுகத்தின் அருகே படகில் பிறந்தவர்தான் சாரா. ‘கடலில்’ பிறந்தவர் என்பதாலோ, சிறு வயதில் இருந்தே கடல், கப்பல் பயணம் மீது சாராவுக்கு அதிக ஆர்வம். அப்பா, அம்மா அடிக்கடி கடல் பயணம் சென்றதால், 4 வயது வரை பெரும்பாலான நேரத்தை கடலிலேயே கழித்தார் சாரா.

நீச்சல், படகு பயணத்தில் 6 வயதுக்குள்ளாகவே கை தேர்ந்தார். ஹாலந்தை ஒட்டியுள்ள வாடன் கடல், வடகடல் பகுதிகளில் படகில் தனியாக சுற்றுலா சென்று வருவது அவருக்கு பொழுதுபோக்கு போல ஆனது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜெசிகா வாட்சன் தனியாக படகு பயணம் மேற்கொண்ட இளம் வீராங்கனை என்ற சாதனையை 2010-ல் படைத்திருந்தார். 17 வயதில் அவர் இந்த சாதனையை படைத்தார். 

இந்த சாதனையை முறியடிப்பதாக சாரா டெக்கர் கடந்த ஆண்டு அறிவித்தார். பெற்றோர் டைவர்ஸ் பெற்றவர்கள் என்பது, அவரது சாதனைக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. தந்தை, தாய் இருவரது கண்காணிப்பில் இருப்பவர் என்பதால், அவரது 15-வது வயது வரை சாதனை பயணம் மேற்கொள்ள கூடாது என ஹாலந்து கோர்ட் தடை விதித்தது. இந்த தடையை கோர்ட் விலக்கிக் கொண்டது.

இதையடுத்து, ‘கப்பி’ என்று பெயரிடப்பட்ட 38 அடி நீள பாய்மர படகில் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி ஐரோப்பாவின் மேற்கு பகுதியில் இபேரியன் தீபகற்பத்தில் உள்ள ஜிப்ரால்டர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டார் சாரா. அட்லான்டிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா வழியாக 5,600 நாட்டிகல் மைல் (10,400 கி.மீ.) தூரம் பயணித்த அவர் கரீபியன் தீவுக்கூட்டங்களில் ஒன்றான செயின்ட் மார்ட்டின் தீவில் உள்ள சிம்சன் துறைமுகத்துக்கு நேற்று வந்தடைந்தார். அப்பா, அம்மா, உறவினர்கள், நண்பர்கள் உள்பட ஏராளமானவர்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls