Saturday, March 24, 2012

வன்னி இறுதிக்கட்ட போரில் அனுபவித்த கொடுமைகள் பற்றி இலங்கை பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்த திடுக்கிடும் தகவல்!

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது சிங்கள அரசு ராணுவத்துடன் நடத்திய கூட்டு கொலைகளின் கோரமுகத்தை சானல்-4 தொலைக்காட்சி வீடியோ மூலம் வெளியிட்டு உலக மக்களின் இதயத்தை அதிர வைத்தது.
இந்த நிலையில் நந்திக் கடலோரம் நடந்த ஈவு இரக்கமற்ற இனப்படுகொலைகள் குறித்து சுரேன் கார்த்திகேசு என்ற பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். இவர் இலங்கையில் இருந்து வெளியான 'ஈழ நாதம்' பத்திரிகையின் நிருபராகவும் புகைப்படக்காரராகவும் இருந்தார். இவர் வன்னிப்பகுதியில் 7 வருடங்கள் பத்திரிகையாளராக இருந்தவர். 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முள்ளி வாய்க்காலில் இறுதிப்போர் நடந்தபோது குண்டு வீச்சில் சிக்கி படுகாயம் அடைந்தார்.


மரணத்தில் இருந்து மீண்ட அவர் தற்போது கனடாவில் தங்கியுள்ளார். இறுதிக்கட்ட போரின்போது தனது கண்முன் நடந்த கொடூரங்களை விளக்கியுள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

2008 நவம்பர் 29-ந்தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு எல்லோரும் தூங்கிக்கொண்டு இருந்தோம். அப்போது தர்மபுரம் என்ற இடத்தில் தொண்டு நிறுவனம் ஒன்றால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட அந்த முகாமில் மன்னார் முதல் கிளிநொச்சி வரையிலான மக்கள் இடம் பெயர்ந்து வந்து தங்கியிருந்தனர். அந்த நள்ளிரவில் திடீர் என முகாமில் இலங்கை ராணுவம் குண்டுவீசி தாக்கியது. பெரும் புகையும் தீயும் சூழ்ந்துகொள்ள... யார் செத்தது என்றுகூட யாருக்கும் தெரியாத நிலை.

இரவு 2 மணிக்கு காமிராவை தூக்கிக்கொண்டு தர்மபுரம் வைத்தியசாலைக்கு ஓடினேன். மக்கள் ரத்தம் வடிய ஓடிவந்தார்கள். வைத்திய சாலை வரையிலும் வந்து வாசலில் செத்து விழுந்தவர்கள் பலர். அந்தத் தாக்குதலில் மட்டும் 30-க்கும் அதிகமானோர் இறந்து போனார்கள். அதன் பிறகு நாங்கள் ஓடிக்கொண்டேதான் இருந் தோம். மரணம் எங்களைத் துரத்தியபடியே இருந்தது. பொதுவாக ஈழத்தில் யாரேனும் இறந்தால் சில சடங்குகள் செய்துதான் புதைப்போம். அந்த இடத்தில் யாரும் நடக்கக்கூட மாட்டார்கள்.

ஆனால் இறுதிக்கட்டத்தில் ஒதுங்க ஒரு நிழலின்றி ஆட்களைப் புதைத்த இடத்தின் மேலேயே கூடாரம் அமைத்துத் தங்கினோம். 2009 ஏப்ரல் 25-ந்தேதி வலைஞர்மடம் என்ற இடத்தில் நான் தாக்குதலில் சிக்கினேன். நெஞ்சில் குண்டு சிதறல்கள் துளைத்தன. சிகிச்சைக்காக முள்ளிவாய்க்கால் வைத்திய சாலையில் இருந்தபோது அங்கு குண்டு போட்டார்கள். உயிர் பிழைக்க மருத்துவமனைக்கு வந்தவர்கள் உடல் சிதறிச் செத்தார்கள். சாவதை விட காயம்பட்டு உயிரோடு இருப்பதுதான் கொடுமை. சரியான மருத்துவ வசதிகளோஇ உணவோ இல்லாமல் எல்லோரும் நடைப் பிணங்களாக இருந்த நிலையில்... யார் யாரைப் பராமரிப்பது? படுகாயம் அடைந்த பலர் ஆங்காங்கே கைவிடப்பட்டு ஆதரவற்று கிடந்ததை இப்போது நினைத்தாலும் மனம் கனக்கிறது.

அவர்கள் ரத்தம் வெளியேறி செத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை. சாலையின் இருபுறமும் ஆங்காங்கே பிணங்கள் கிடக்கும். சுதந்திரபுரம் சந்திக்கு அருகில் கிடந்த ஒரு தாயையும் மகளையும் நானே எரியூட்டினேன். நாட்கள் செல்லச் செல்ல உணவுக்கும் தண்ணீருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டன. தொண்டு நிறுவனங்கள் கஞ்சி கொடுப்பார்கள். 12 மணி கஞ்சிக்கு 10 மணிக்கே போய் நிற்க வேண்டும். அந்த வரிசையிலும் குண்டு விழும். அதில் ஐந்தாறு பேர் செத்தால் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டு மீதி ஆட்கள் வரிசையில் நிற்பார்கள்.

செத்தவர்கள் சாக இருப்பவர்கள் பிழைக்கப் போராடினோம். ஒரு கிலோ மிளகாய் 12000 ரூபாய் சீனி 6000 ரூபாய் பால்மா பாக்கெட் 4000 ரூபாய்... என்ன செய்ய முடியும்? கொஞ்ச நாட்களில் அந்தப் பொருட்களும் கிடைக்கவில்லை. பல நாட்களாக எல்லோரும் பட்டினியில் கிடந்தோம். தேங்கிக்கிடக்கும் மழை நீர்க் குட்டையில் இருந்த தண்ணீரை எடுத்து வடிகட்டிக் குடித்தோம். 10 நாட்கள் தொடர்ந்தாற்போல பதுங்கு குழிக்குள் இருந்த அனுபவம் பலருக்கும் உண்டு. பதுங் குக்குழியே வாழ்வானது. நடுச்சாமத்தில் தூங்கு பவர்களை எழுப்பிவிட்டு மீதி உள்ளவர்கள் தூங்குவார்கள்.

2009 ஏப்ரல் வரையில் செல்போன் தொடர்பு இருந்தது. மே மாதம் தொடக் கத்தில் அதுவும் அற்றுப் போனது. மே 18-ம்தேதி 'பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார்' என அறிவிக்கப்பட்டபோது எல்லோரும் கைவிடப்பட்டதைப்போல உணர்ந்தனர். 'தோற்று விட்டோம்' என்ற உணர்வு எல்லோருக்கும் வந்துவிட்டது.

அந்தச் செய்தி வெளியான நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தடுப்பு முகாமில் இருந்தனர். அங்கு நீண்ட வரிசையில் வெயிலில் சாப்பாட்டுக்காகத் தட்டேந்தி நிற்கையில் பலர் கரகர வெனக் கண்ணீர்வீட்டு அழுதார்கள். அதன் பிறகு முகாம் நாட்களில் பலருக்கு மனச்சிதைவு நோய் வந்துவிட்டது. நான் முகாமில் இருந்து வெளியேறி விமானம் மூலம் தாய்லாந்து வந்தேன். அங்கே இருந்து 492 பேர் ஒரு கப்பல் மூலமாக மூன்று மாதக்கடல் பயணத்துக்குப் பிறகு கனடா வந்து சேர்ந்தோம். போர் எங்களைச் சிதைத்து விட்டது.

எங்களை என்றால் எங்கள் மகிழ்ச்சியை எங்கள் போராட்டத்தை எங்கள் மண்ணை எங்கள் மக்களை எங்கள் உறவுகளை எங்கள் உடலை எங்கள் உயிரை! பறித்து விட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளா

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls