Saturday, December 17, 2011

பேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்?


சூரியன் உதிப்பதைப்போல், காற்று வீசுவதைப்போல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல் என்று கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைக் கூறலாம். அந்த அளவுக்கு குப்பை வீசியே மறைத்துவிடும் எத்தனத்தில் விதவிதமான புனைவுகளும், பொருளற்ற பொய்களும், பொருந்தா விளக்கங்களும் நாளும் பொழிந்து கொண்டே இருக்கின்றன. இது போன்ற அவதூறுகளுக்கு விளக்கமளிக்க முனைந்தால், வேறு எதையும் செய்யமுடியாத அளவுக்கு கம்யூனிஸ்டுகளின் நேரம் அவர்களுடையதாக இருக்காது. அதேநேரம் அத்தனை அவதூறுகளுக்கும் மறுக்கவியலா முறையில் தகர்ப்புகளும், தரவுகளும் தரப்பட்டிருக்கின்றன. என்றாலும் அவதூறுகளுக்கான தேவை குறைவதே இல்லை. ஏனென்றால் அவதூறுகள் விமர்சனத்திலிருந்தோ, ஆய்விலிருந்தோ கிளைப்பதில்லை. மாறாக கம்யூனிச எதிர்ப்பிலேயே தம்முடைய இருப்பு இருக்கிறது எனும் நிலையிலிருந்து கிளைக்கிறது. அதனாலேயே அவதூறுகள் மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் கொட்டப்படுகின்றன.

தமிழ் இணையப் பரப்பில் அவ்வாறான அவதூறுகளையும் அதற்கான விளக்கங்களுடன் தொகுக்க வேண்டும் எனும் ஆவலை, தொடராக செய்யலாம் எனும் முயற்சியே இந்தப் பகுதி. முதலாவதாக ஆணாதிக்கத்தை, பெண்ணியத்தை எடுத்துக் கொள்ளலாம். சில அடிப்படையான அம்சங்களை பார்ப்பதனூடாக அதற்குள் கடக்கலாம்.
இந்த உலகம் ஆணாதிக்க உலகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஓரளவு அனைவரும் அறிந்து வைத்திருப்பர். இதற்கு எதிராக ஆணாதிக்கம் போட்டுத்தந்த பாட்டையில் நடைபோடுவதை பெண்களுக்கான சுதந்திரமாக மேற்கு நாடுகள் விளம்புகின்றன. ஆணாதிக்கம் என்பதை ஆண் சார்ந்ததாகவும், பெண்ணியம் என்பதை பெண் சார்ந்ததாகவும் மடைமாற்றி ஆணுக்கு எதிராக பெண்ணைப் போராட வைப்பது எனும் ஏற்பாட்டின் மூலம் ஆணாதிக்கத்தை தக்க வைப்பதைத்தான் இன்றைய முதலாளியம் கைக் கொண்டிருக்கிறது. இதற்கு மாறாக மார்க்சியம் ஆணாதிக்க சமூகத்திலிருந்து ஆண்களும் பெண்களும் விடுதலை பெற வேண்டும் என்கிறது. பெண்களுக்கு எதிராக செய்யப்படும் குற்றங்களையும் அத்துமீறல்களையும் விமர்சிப்பது மட்டுமோ அல்லது ஆண்களின் சீரழிவுகளை அதே தன்மையுடன் நாங்களும் செய்வதை முன்னிட்டு ஆண்கள் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்பது மட்டுமோ பெண்ணியமாகிவிடுவதில்லை. ஆண்களும் பெண்களும் ஆணாதிக்கத்தில் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களை ஆணாதிக்கத்தில் நீடிக்க வைப்பதின் பலனும் தேவையும் தனியுடமைக்கு இருக்கிறது. ஆகவே தனியுடமையை தக்கவைத்துக் கொண்டு பெண்ணியம் பேசுவது பொருத்தமாகவும் இருக்காது, தனியுடமையை தகர்ப்பதை நோக்கமாக கொள்ளாத வரை அது முழுமையடையவும் முடியாது.
காதல்
இன்று இளவயதின் பொழுது போக்காக இருக்கிறது காதல். அதற்கும் மேல் ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையாக இருக்கிறது. ஆனால் இது ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்களின் போராட்டம். தனியுடமை வளர்ந்து வந்த காலங்களில் சமூகத்தின் கலவிக் கட்டுப்பாடுகளிலும் மாற்றங்களைக் கொண்டுவந்தது. ஆணின் பலதார வேட்கை (இன்றுவரை இது பல்வித வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது) வரைமுறையின்றி பெண்களைச் சீரழித்த போது, தன்னிடம் நீளும் பலதரப்பட்ட கைகளிலிருந்து தன்னைக் காக்க ஒன்றை தெரிந்தெடுக்கும் முடிவிலான பெண்ணின் ஆயுதம் தான் காதல். காதலின் அடிப்படையே ஆணாதிக்க பலத்தின் எதிரே பெண் தன் பாதிப்பைக் குறைத்துக் கொள்ளும் உத்தி தான். அதனாலேயே இன்றும் பெண் காதலிப்பவளாகவும், ஆண் காதலிக்கப்படுபவனாகவும் இருக்கிறார்கள். ஆனால் இன்றைய பெண்ணியத்தின் பார்வையோ சுதந்திரமாய் காதலிக்கும் உரிமை கோருகிறது. அதாவது காதல் என்பதை சமூகத்துக்கு வெளியே தனி மனிதனின் உரிமையாக நுகர்ச்சி சார்ந்த விசயமாக அணுகுகிறது. ஆனால் அது இருவேறு கூறுகளாக பிரிந்து கிடப்பதை பொருட்படுத்த மறுக்கிறது. சுதந்திரமான காதலைக் கோரும் அதே வேளையில் காதலிக்க சுதந்திரம் இல்லாமலிருக்கும் சூழலை மாற்றுவது குறித்து கவலையற்றிருக்கிறது. இதில் தொழிற்படும் வர்க்க வேறுபாடுகளை உள்வாங்காமல் ஆளும்வர்க்க மானோபாவத்தில் கட்டுப்பாடுகளற்று சுதந்திரமாக காதல் புரியும் உரிமையைக் கோருவதே இன்றைய பெண்ணியத்தின் செயல்பாடுகளாக இருக்கிறது. அதேநேரம் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கம் காதலிக்கவே சுதந்திரமின்றி முடக்கப் பட்டுள்ளது. எனவே காதலிக்க சுதந்திரம் கோருவது என்பது சமூக, பொருளாதார விசயங்களுடன் பிணைக்கப் பட்டுள்ளது. இதை பொருட்படுத்தாமல் புறந்தள்ளும் எதுவும் காதலாக இருக்க முடியாது, உடல் நுகர்ச்சியாகவே இருக்க முடியும்.
திருமணம்
தொடக்கத்திலிருந்து இப்போது வரை திருமணம் என்பது ஒரே வடிவமாக இருந்து வந்திருக்கவில்லை. கணங்களுக்கு பொதுவான மண முறையிலிருந்து தனி மனிதனுக்கான மணமுறை வரை திருமணம் பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளது. எனவே தற்போதைய திருமண வடிவம் இப்படியே நீடித்திருக்கும் என எதிர்பார்க்க முடியாது. இதில் முதன்மையாக கவனிக்க வேண்டியது, திருமணம் என்பது சொத்துடமையின் சாரம் தானேயன்றி காதலின் சாரம் அல்ல. ஆகவே சொத்துடமை மாறும் போது திருமணங்களும் மாறியே தீரும். ஏனென்றால் ஒருவனுடைய சொத்து வேறு யாரையும் அடைந்துவிடாமல் அவனின் நேரடி இரத்த வாரிசுக்கு கடத்துவது தான் திருமணத்தின் இறுதியான பலன்.
உழைப்பு
இயற்கையோடு வினை புரிந்து மனித முன்னேற்றத்திற்கான உற்பத்தியில் ஈடுபடுவதே உழைப்பு. இதில் பால் வேற்றுமைக்கு இடமில்லை. மனிதனின் தொடக்கமான புராதன பொதுவுடமை சமூகத்தில் பெண் தலைமை ஏற்றிருந்த வரையில் உற்பத்தியில், உழைப்பில் பால் வேற்றுமை ஊடுருவவே இல்லை. மாறாக ஆண் தலைமை ஏற்று ஆணாதிக்கம் கருக்கொண்ட போது பாலியல் ரீதியான பிரிவினைகள் மெல்ல மெல்ல புகுத்தப்பட்டன. சமூக உற்பத்தியில் ஆண் ஈடுபட பராமரிப்பு சார்ந்த பணிகளில் மட்டுமே பெண்கள் முடக்கப்பட்டார்கள். விவசாயம், மருத்துவம், கட்டடக் கலை போன்றவைகளை பெண்களே உலகிற்கு வழங்கி இருந்தாலும் திட்டமிட்டு பெண் உற்பத்தியிலிருந்து பிரித்து வைக்கப்பட்டாள். இதன்மூலமே ஆணைச் சார்ந்திருப்பவளாக பெண் மாற்றப்பட்டாள். பெண் ஆணைச் சார்ந்திருப்பவளாக இருபதன் மீதே ஆணாதிக்கம் நிலைபெற்றிருக்கிறது. எனவே ஆணாதிக்கம் தகர்க்கப்பட வேண்டுமென்றால் அதன் முதல் நிபந்தனையே சமூக உற்பத்தியில் பெண் ஈடுபடுத்தப் படவேண்டும் என்பதாகத்தான் இருக்க முடியும். ஆனால் இன்று பெண் உற்பத்திக்கு வெளியே சமையல், குழந்தை வளர்ப்பு, பராமரிப்பு பணிகளில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டிருக்கிறாள்.
அரசியல்
அரசியலில் பெண்களின் பங்களிப்பு நிச்சயமாய் ஆண்களுக்கு குறைந்ததாய் இருக்க முடியாது. இன்றைய நிலையில் பெண்கள் அரசியலில் பங்களிப்பது அரிதான செயலாகவே இருக்கிறது. அதேவேளையில், எல்லா விதத்திலும் பெண்களை ஒதுக்கி வைத்து விட்டு அரசியலில் பெண்களின் பங்களிப்பு இல்லை என்பது உள்நோக்கம் கொண்டதாகவே இருக்க முடியும். நிர்வாக உரிமை என்பது உற்பத்தியின் பங்களிப்பிலிருந்தே பிறக்கும். அரசியல் என்பது நாட்டின் நிர்வாகம். நாட்டின் உற்பத்தியில் பெண்கள் எந்த அளவிற்கு பங்களிக்கிறார்களோ அந்த அளவிற்குத்தான் நிர்வாகத்திலும், அரசியலிலும் பங்களிப்பு இருக்கும்.இந்த வகையிலும் பெண்கள் உற்பத்தில் ஈடுபட்டாக வேண்டியது இன்றியமையாததாக இருக்கிறது.
இனி அவதூறுகளைக் கவனிக்கலாம்.
கம்யூனிசம் என்பது அனைத்தையும் பொதுவுடமையாக வைப்பது. அது குடும்ப உறவுகளைச் சிதைத்து மனைவி மக்களையும் பொதுவுடமையாக்கும். காட்டுமிராண்டி காலத்தில் இருந்தது போல் யாரும் யாருடனும் புணரலாம் எனும் மிருக நிலையை ஏற்படுத்துவது தான் கம்யூனிசம்.
இப்படிக் கூறுபவர்கள் எந்த அடிப்படையில் இருந்து இதைக் கூறுகிறார்கள் என்று பார்த்தால் வெறும் யூகமாகத்தான் இருக்கும். இதற்கு அடிப்படையான கருத்துகள் எதையும் கம்யூனிச நூல்களிலிருந்தோ, ஆசான்களின் மேற்கோள்களில் இருந்தோ காட்ட முடியாது. இந்த வெற்று யூகத்தின் நோக்கமே பொதுவுடமை எனும் வார்த்தையை மையமாக வைத்து மக்களை அச்சுறுத்துவது தான். ஆனால் திருமணம் என்பது ஆணாதிக்க வடிவம் என்பதை மறுக்க முடியாது. பெண் தனது அனைத்து வித கட்டுகளிலிருந்தும் விடுதலை பெறும் போது திருமணம் எனும் வடிவத்திலிருந்தும் விடுதலை பெற்றாக வேண்டும். என்றால் சோசலிசத்தில் மண உறவு எவ்வாறு இருக்கும்? சேர்ந்து வாழ்தல் எனும் லிவிங் டுகதர் என்பது சோசலிசத்திற்கு நெருக்கமான வடிவம் தான். ஒத்த உணர்வுகள் ஏற்படும் போது சேர்த்து வாழ்வது எளிதாகவும், கருத்து வேறுபாடுகள் தோன்றி முற்றும் போது பிரிவது எளிதாகவும் இருக்க வேண்டும். யாரும் யாரையும் அடக்க முற்படாமல் இயல்பாய் வாழ வேண்டும். யாரையும் ஏற்பதும் மறுப்பதும் இணையின் சொந்த முடிவாய் இருக்க வேண்டும். இதற்கு திருமணத்தை விட லிவிங் டுகதரே வசதியான வடிவம். அதேநேரம் இது சட்டம் போட்டு ஓரிரவில் ஏற்படுத்தப்படும் மாற்றமாக இருக்காது.
இந்த வசதிகள் ஓரிரு மதங்களில் விவாகரத்தூரிமை உட்பட ஏற்படுத்தப்பட்டிருக்கிறதே என சிலர் எண்ணலாம். ஆனால் அவைகள் மேலோட்டமானவை. ஆணைச் சார்ந்து இருப்பவளாக பெண்ணை இருத்திவிட்டு செய்யப்படும் சில்லரை சீர்திருத்தங்கள். ஆணால் வழங்கப்படும் சலுகையாக இருப்பதற்கும் அதுவே பெண்ணின் உரிமையாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மட்டுமல்லாது பொருளியல் பலம் இல்லாமல் பெண்களுக்கு கொடுக்கப்படும் இது போன்ற சலுகைகள் ஒருவகையில் அவளை மிரட்டவே பயன்படும்.
லிவிங் டுகதர் மெய்யாகவே பெண்களை தளைகளிலிருந்து மீட்பதாக இருக்க வேண்டுமென்றால் இரண்டு வித தன்மைகள் சமூகத்தில் நிலவ வேண்டும். ஒன்று, ஆணும் பெண்ணும் சமம் எனும் நிலை ஏற்பட்டிருக்க வேண்டும். இரண்டு, குழந்தை வளர்ப்பு தனிமனித பொறுப்பாக இல்லாமல் அரசின் கடமையாக இருக்க வேண்டும். இந்த இரண்டும் ஏற்பட்டிருக்காத சமூகத்தில் லிவிங் டுகதர் பெண்ணுக்கு மற்றொரு சுமையாகவும், ஆணுக்கு பலதார வேட்கைக்கான இன்னொரு கருவியாகவுமே இருக்கும்.
பெண்களையும் உற்பத்தியில் ஈடுபடுத்துவது எனும் பெயரில் ஆலைகள், தொழிற்சாலைகள், விவசாயத்தில் ஆண்களைப் போல் கடினமாக உழைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிது “ஆண்களைப் போல் கடினமாக” எனும் சொற்களை. கடின வேலைகளுக்கு ஆண்கள், மென்மையான வேலைகளுக்கு பெண்கள் எனும் பகுப்பை எந்த அடிப்படையில் இவர்கள் செய்கிறார்கள்? ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு எதிராக இவர்கள் எடுத்து வைக்கும் வாதத்தை கவனித்தால் இந்த அடிப்படை விளங்கும். ஆணைவிட பெண் இயற்கையாகவே உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பலவீனமானவளாக இருக்கிறாள். எனவே ஆணும் பெண்ணும் சமமாக இருக்க முடியாது என்று வாதிப்பவர்களே “ஆண்களைப் போல் கடினமாக” என்பதை பயன்படுத்துகிறார்கள். உடல் பலமும், அறிவுத் திறனும் பயிற்சியினால் வருபவைகள். அந்த பயிற்சியை பெண்களுக்கும் அளிக்க வேண்டும் என்றால் ஆண்களைப் போல் கடினமாக எனும் திரையில் பெண்களுக்கு பரிந்து பேசுபவர்களாய் தோற்றம் தருகிறார்கள். பயிற்சியை மறுத்து பலவீனமானவளாக பெண்ணை ஆக்கிவிட்டு அதனால் தான் ஆண் உயர்ந்தவன் என்கிறார்கள்.
கம்யூனிசம் என்பதை அதன் சரியான பொருளில் உணராதவர்கள் கூட கம்யூனிஸ்டுகள் என்றால் உழைப்பவர்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் என்பதாகத்தான் தெரிந்து வைத்திருப்பார்கள். என்றால் சோசலிசத்தில் பெண்களை கடினமான வேலைகளில் கசக்கிப் பிழிந்தார்கள் என்பது எந்த விதத்தில் உண்மையாக இருக்க முடியும்?
முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் சோசலிச உற்பத்தி முறைக்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. முதலாளித்துவம் லாபத்திற்காக உற்பத்தி செய்கிறது, சோசலிசம் தேவைக்காக உற்பத்தி செய்கிறது. லாபமே இலக்கு என்பதால் முதலாளித்துவம் பெரும்பாலானவர்களை வேலையில்லாத ‘ரிசர்வ் பட்டளமாக’ ஆக்கிவைத்து குறிப்பிட்ட உழைப்பளிகளின் கடின உழைப்பைக் கொண்டு உற்பத்தி இலக்கை எட்டுகிறது. சோசலிசமோ லாப நோக்கின்றி தேவையை கருத்தில் கொண்டு அனைவரையும் உற்பத்தியில் ஈடுபடுத்துவதன் மூலம் இலக்கை எட்டுகிறது. முதலாளித்துவ உலகில் இயல்பு மீறிய கடின உழைப்பை தனிமனித முன்னேற்றம் என்ற பெயரில் அங்கீகரிப்பவர்கள், நாட்டின் முன்னேற்றத்திற்காக குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் விருப்பப்படுபவர்கள் அதிக நேரம் வேலையை செய்ய முன்வாருங்கள் என அழைப்பதை கொச்சைப்படுத்த முடியுமா?
சோசலிச உற்பத்தியின் முதன்மையான அம்சம் உழைப்பளிகளை அவர்கள் விரும்பும் வேலையை விரும்பும் விதத்தில் செய்ய உற்சாகமூட்டுவதன் மூலம் உழைப்பின் மீதான பிணைப்பை அதிகரிப்பது. ஈடுபாட்டுடன் செய்யும் வேலையான இதில் கடின உழைப்பு எங்கிருந்து வரும்?
உடற்கலவிக்கு கட்டுப்பாடு, தாயின் பராமரிப்பு மறுக்கப்படும் குழந்தைகள் பற்றி.
ஆண் பெண் கலவி என்பது இனப்பெருக்கத்தை நோக்கமாக கொண்டது. உடற்தேவையான இது மனத்தேவையாக மாற்றம் பெருவதிலிருந்துதான் சிக்கல்கள் தோன்றுகின்றன. இன்றைய நிலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் உடலுறவு குறித்த மயக்கங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை மறுக்க முடியுமா யாரும்? பொருளாதார நிலமைகளினால் உடலுறவு பலன்களை தடுப்பதற்கான, இன்ப நுகர்வாக உடலுறவை மாற்றி அதற்கான உந்துதல்களை தூண்டுவதற்குமான மருந்துகளின் விற்பனை பல்லாயிரம் கோடிகளில் கொழிக்கும் சுரண்டலாக இருக்கும் போது; முதலாளித்துவத்தின் அத்தனை சுரண்டல்களையும், கசடுகளையும் அகற்றும் சோசலிசம் உடலுறவின் மீது கவிழ்ந்திருக்கும் கசடுகளை மட்டும் அகற்றக் கூடாது என்று யாரேனும் கருத இடமுண்டா? ஒரு விழிப்புணர்வாக செய்யப்படும் இதை நேரம் குறித்த இயந்திரத்தனமான செயல்பாடாக கருதுவது என்ன விதமான மனோநிலை?
சோசலிசத்தில் குழந்தைகள் வளர்ப்பு தனிப்பட்டவர்களின் பொறுப்பல்ல, சமூகத்தின் கடமை. தாயின் பராமரிப்பு என விதந்தோதுவது குழந்தை வளர்ப்புடன் பெண்ணைப் பிணைக்கும் ஆணாதிக்க சிந்தனை. ஏற்றத்தாழ்வற்ற, வர்க்க பேதமற்ற சமூகத்தை நோக்கி அடிவைக்கும் சோசலிசம் அதன் குருத்துகள் மீது கவனம் கொள்ளாமல் இருக்க முடியாது. தாயின் பராமரிப்பு என இன்று விதந்தோதப்படுவது தாயின் பாசத்துடன் கூடிய வளர்ப்பு முறை. தனியுடமையின் சாயலுடன் கூடிய தாயின் பாசத்தில் இருக்கும் வளர்ச்சியின் சிறப்பைவிட சமூக நோக்கில் உயரிய சிந்தனை முறையுடன் கூடிய வளர்ச்சி மேலானதாகவே இருக்கும். அதேநேரம் இது பெண்ணின் வளர்ச்சிக்கும் அவசியமானது.
பெண்களின் சமத்துவம் குறித்து பேசும் இவர்களில் எத்தனை பெண் தலைவர்கள் இருக்கிறார்கள்?
அரசியல் பங்களிப்பு என்பது எண்ணிக்கையைப் பொருத்ததல்ல. ஆணுக்கு சமமான உரிமையைப் பொருத்தது. உற்பத்தியில் இருக்கும் பங்கின் அளவிற்கே நிர்வாகத்தில் இருக்கும் என்பது தோழர் லெனின் கூற்று, உற்பத்தியில் ஆணுக்கு சமமான பங்களிப்பை பெண்கள் ஆற்றும் சமூகம் வரை இந்த வேறுபாடு தொடரவே செய்யும். சோவியத்களில் ஆணுக்கு சமமான அரசியல் பங்களிப்பை பெண்கள் செய்தார்கள். சட்ட உருவாக்கங்களில், அரசியல் விவாதங்களில் ஆணுக்கு சமமாக பெண்களும் கலந்து கொண்டார்கள். இதன் தொடர்ச்சியிலிருந்து தான் தலைவர்கள் உருவாகி வரவேண்டும். மாறாக தலைமைப் பொறுப்பில் சில பெண்கள் அமர்ந்து விடுவது மட்டுமே சமத்துவத்தைக் குறிக்காது. இன்று உலகில் இருக்கும் பெண் தலைவர்கள் ஆணாதிக்கத்தை எதிர்ப்பவர்கள் என்று கூற முடியுமா? ஆகவே ஆணாதிக்கத்தின் தகர்வு என்பது பெண் தலைவர்களின் எண்ணிக்கையைப் பொருத்ததல்ல.
அடுத்ததாக, முக்கியத்துவம்(!) வாய்ந்த கேள்விக்கு வருவோம். உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பு குறித்து பேசும் இவர்களின் சொந்த வாழ்வில் பெண்களை உற்பத்தியில் ஈடுபடுத்தவில்லையே ஏன்?
உற்பத்தியில் பெண்களை ஈடுபடுத்துவது என்பதை கீழிருந்து மேலாக செய்ய முடியாது. அதாவது தனிமனிதனாக இதை செய்ய முடியாது. சோசலிச அரசு ஏற்பட்ட பின்னர் மேலிருந்து கீழாக படிப்படியாகவே ஏற்படுத்த முடியும். உற்பத்தியில் பங்களிப்பது என்பது வெறுமனே வேலைக்குப் போவதல்ல. இன்று வேலைக்குப் போகும் பெண்கள் தங்களின் ஊதியத்தில் குறைந்த பங்கைக் கூட தங்கள் விருப்பத்துடன் செலவு செய்ய முடியாதிருக்கிறார்கள் என்பதே இதற்குச் சான்று. அதேநேரம் ஆணாதிக்க சூழலிருந்து வெளிவர விருப்பமற்று இருப்பவர்கள் என்றாலும் இயன்றவரை தங்கள் குடும்பத்தினரை அதிலிருந்து வெளியில் கொண்டு வரும் எத்தனங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள் தோழர்கள். வாழ்வின் நடப்புகளிலிருந்து சமூக மத கட்டுப்படுகளை மீறி வருவதற்கு ஊக்கமளிக்கிறார்கள். இதை அவர்களின் புரிதல்களினூடாகத்தான் செய்ய முடியுமேயன்றி திணிக்க முடியாது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls