Sunday, December 4, 2011

இணையத்தளங்களின் அராயகமும் ஈழத்தை கற்பளிக்கும் இணையத் தளங்களும்

மானம் மலிவு விற்பனை இலங்கை தமிழ் இணைய ஊடகம்
இன்று யாழ்ப்பாணம் என்றாலே கலாச்சார சீரழிவுகளின் மைய  நகரம் என்ற ஒரு கருத்து மாயை உலக மக்கள் மத்தியிலே தோன்றியுள்ளது. யாழ் மக்களை மதித்தவர்கள் இப்போது கேவலமாக பார்க்கத் தொடங்கியுள்ளார்கள். இந்த பெருமையெல்லாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இப்போது வெளியில் இருந்து இயங்கும் நடுநிலைவாத, நேர்மையான, யாழ் மக்களின் கலாச்சாரத்தின் தாங்கு தூண்களான தம்மை கூறும் சில தமிழ் இணைய ஊடகங்களையே சாரும்.
ஊடகம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அதிலும் இணைய ஊடகங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அப்படிப்பட்ட சக்திவாய்ந்த ஊடகங்கள் சிறுபிள்ளைத்தனமானவர்களின் கைகளுக்கு சென்றால் என்ன நடக்கும் என்பது, சமீப காலத்திய யாழ் தமிழ் இணைய ஊடகங்களின் செய்ற்பாடுகள் மூலம் புலனாகிறது.


ஊடக தர்மம் என்றால் என்னவென்றே அறியாமல் வெறும் ஹிட்ஸை மாத்திரமே கருத்தில் கொண்டு இவர்கள் வெளியிடும் செய்திகள் அபத்தமானவை ஆபாசமானவை. அதிலும் முக்கியமாக Newjaffna, TamilCNN போன்றவை இந்த விடயத்தில் தாராளமாக, எந்தவித தயவு தாட்சனியம் இன்றியும் செய்திகளை பிரசுரித்து வருகின்றன. ஆனால் அவர்கள் வெளியிடும் செய்திகளில் அனேகமானவை கருவுக்கு உருக்கொடுக்கப்பட்டவையே. உதாரணமாக யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் தன் காதலனுடன் ஓடிவிட்டாள் என்றால் அவர்கள் அதை செய்தியாக்கி அந்த செய்திக்கு இடும் தலைப்பு எவ்வாறு இருக்கும் தெரியுமா?
 “ யாழ் மாணவி வாலிபனுடன் தலைமறைவு”
இவ்வாறுதான் இருக்கிறது அவர்களின் தலைப்புகளும் செய்திகளும். அண்மையில் கூட Newjaffna தளம் ஒரு செய்தி வெளியிட்டிருந்ததது” செல்போனில் வந்த காதலால் கற்பவதியாகிய யாழ்.இளம்பெண்” என்று ஒரு செய்தியை பிரசுரித்து அதனுடன் அந்த பெண்ணின் புகைப்படம் வீடியோ என்பவற்றையும் இணைத்து அந்த பெண்ணின் எதிர்கால வாழ்க்கையையே அழித்துவிட்டார்கள் இந்த கலாச்சார காவலர்கள். இவர்களிடம் கேட்கிறேன், இதே நிலை உன் அக்காவிற்கோ தங்கைக்கோ வந்தால் அவர்களிடம் பேட்டி எடுத்து அவர்களின் போட்டோவையும் போடுவாயா? எதற்கு இந்த மானம் கெட்ட பிழைப்பு. 
இது மாத்திரமல்ல, சிறுவர் தினத்தன்று சுப்பிரமணியம் பூங்காவில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பல சிறுவர்கள் கலந்துகொண்டனர். அங்கு இராணுவத்தினரால் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தன. அதற்கு இவர்கள் போட்ட செய்தி என்ன தெரியுமா? “ஆமியுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் கர்ப்பம் தரிக்கக்கூடிய வயதுக்கு வந்த சிறுமிகள்” என்று அந்த காணொளியையும் இணைத்திருந்தார்கள். ஒரு சாதாரண விடயத்தை எந்தளவிற்கு பெரிதாக்கியிருக்கிறார்கள் பாருங்கள். இவர்களுக்கு தேவைப்படுவது தமிழ் மக்களின் கலாச்சார பேணுகையோ, அல்லது அவர்களின் இன வளர்ச்சியோ அல்ல. மாறாக எமது இன மானத்தை சந்தையில் வைப்பதம் மூலம் ஈட்டும் பணமே அவர்களது நோக்கம். பணத்துக்காக சொந்த இனத்தின் மானத்தையே விற்கிறார்கள். யாழ்ப்பாணத்தை ஒரு கேவலம்கெட்ட, அடிமட்ட சமூகமாக சித்தரித்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் எத்தனை நல்ல விடயங்கள் நடக்கின்றன அவை எதுவும் இவர்களுடைய கண்களுக்கு தெரிவதில்லையா?. தெரிந்தாலும் அதை போட்டால் யாரும் பார்க்கமாட்டார்கள். ஹிட்ஸ் கிடைக்காது. பணம் சம்பாதிக்க முடியாது.

சுதந்திர ஊடக அமைப்பிற்கெதிரான இவர்களின் அறிக்கையும் என் கேள்விகளும்

அண்மையில் யாழ்ப்பாண சுதந்திர ஊடக அமைப்பு இவர்களின் இத்தகைய தான் தோன்றித்தனமான செயற்பாடுகளை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. அறிக்கை வெளியாகிய மறு நிமிடமே துள்ளியெழுந்த இந்த கலாச்சார காவலர்கள் நாம் செய்வதை செய்வோம், அதை கேட்க நீ யார் என்னும் ரீதியிலாக மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.

அந்த அறிக்கைக்கு அவர்களிடமே சில விளக்கம் கேட்கிறேன்.

இங்கே சிவப்பு நிறத்தில் உள்ளவை அவர்களின் அறிக்கை.

//இவ்வாறான குரல்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் எழுவதாக இருந்தால் அதற்கு புலிகளின் முன் அனுமதி பெற்று யார் யார் அதற்கு தலைவர் செயலாளராக வரவேண்டும் என புலிகளே தெரிவு செய்வார்கள். புலிகள் தாங்கள் தெரிவுசெய்பவர்களில் தேசத்துரோகிகள் என அவர்களது மனதில் தென்படுபவர்களை களை எடுத்தே இவ்வாறான குரல்களை ஒலிக்கச்செய்வார்கள். //

இப்போது சுதந்திர ஊடக அமைப்பு எப்படி உருவானது என்பது பிரச்சினை அல்ல. புலிகள் தெரிவு செய்தால்தான் அவர்கள் நேர்மையானவர்களாக இருப்பார்கள் என்பது சிறுபிள்ளைத்தனமான வாதம். சுதந்திர ஊடக அமைப்பு உங்களுக்கெதிராக வெளியிட்ட அறிக்கை சரியானதுதானே. தவிர தேவை அற்று புலிகளை இதற்குள் இழுக்கிறீர்களே... புலிகள் பற்றி நீங்கள் சரியாக அறிந்திருந்தால் உங்களை போன்றவர்களுக்கு எப்படியான கடுமையான தண்டனைகள் கிடைத்திருக்கும் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். நீங்கள் சொல்லும் தேசத்துரோகிகள் பட்டமும் உங்களுக்கே கிடைத்திருக்கும். அதை நான் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டும் என்ப்தில்லை.

இன மானத்தை விற்கும் நீங்கள் உத்தமர்கள், தியாகிகள். அதை தட்டி கேட்பவர்கள் தேசத்துரோகிகளா. இன்னும் எத்தனை காலத்துக்கு உங்களை புலிகளுக்கு ஆதரவானவர்கள் போல காட்டி போலி வேசம் போடப்போகின்றீர்கள்?

//ஆனால் தற்போதைய நிலையில் சுதந்திர ஊடக அமைப்பு உருவாகும் சுதந்திரம் தாராளமாக இருக்கின்ற காரணத்தினால் தேசியத்தை பற்றாக வைத்திருப்பதுபோல் நடித்து பேர் பெற்ற உதயன் பத்திரிகை சுதந்திர அமைப்பை உருவாக்கியது//
இதை பற்றி சொல்லும் அருகதை உங்களுக்கு கிடையாது. இப்போது நீங்கள் வெளியிடும் செய்திகள் போன்று ஏன் புலிகளின் காலத்தில் நீங்கள் வெளியிடவில்லை. இப்போது நடக்கும் , நீங்கள் கலாச்சார சீரழிவு என்று கூறும் சில செயற்பாடுகள் அப்போதும் நடந்தனவே. ஆண்கள் பெண்களை காதலித்தார்கள். பெண்கள் ஆண்களை காதலித்தார்கள். ஒருவரை ஒருவர் ஏமாற்றினார்கள். ஏன் அப்போது நீங்கள் அப்படி செய்தி போடவில்லை. நீங்கள் சொன்ன அதே சுதந்திரம் தாராளமாக கிடைக்கின்ற படியால்த்தானே இப்படி செய்திகள் போடுகின்றீர்கள்?
//எவ்வாறு ஒரு தனி நபர் தன்னுடைய செயற்பாடுகளை சமூகத்திற்கு பாதிப்பாக செயற்படுத்துகின்றாரோ உதாரணமாக மலம் கழிக்கும்போது மற்றவர்களின் மூக்கிற்கு மணம் ஏற்படாதவாறு, சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்காது கழித்தல் வேண்டும்.அவ்வாறு செய்யாது தெருவோரங்களிலும் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகவும் மலசலம் கழித்தால் பகுத்தறிவு உள்ள மனிதனின் செயல் என்று நாம் கருதி அவனது பிழைகளை திருத்துவதற்காக அவன் மலசலம் கழிக்கும்போது எமது செயற்பாடுகளினால் அவனை ஊடகத்தில் காட்டுவோம். இது தனி நபரை தாக்கும் விடயம் அல்ல//
சரி. நான் ஒன்று கேட்கிறேன். உன் குடும்பத்தில் ஒருவன் தவறு செய்தால் குடும்பத்தாருடன் சேர்ந்து அவனது தவறுகளை கண்டிப்பாயா, அல்லது ஊர் மக்களை கூப்பிட்டு அவர்கள் மத்தியில் வைத்து சந்தி சிரிக்கும்படி கண்டிப்பாயா?
அதை விடுவோம். பல பெண்கள் பற்றிய செய்திகளை அவர்கள் படத்துடன் போட்டு அவர்களின் வாழ்க்கையை பாழாக்குகிறாயே. அதற்கு என்ன காரணம்.
--------------  இதற்கு மேல் பதிவு நீண்டுவிடும் என்பதால், அவர்களின் அறிக்கை பற்றி ஒரு தொகுப்பாக தருகிறேன் -------------------

* அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் தமக்கு குடாநாட்டில் ஆயிரக்கணக்கான வாசகர்கள் இருப்பதாக. ஒரு விடயம் தெரியுமா? ஆபாசத்தளங்களுக்கு கூடத்தான் அதிகளவிலான வாசகர்கள் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் எல்லோரும் அப்படியான தளங்களை ஆதரிக்கிறார்கள் என்று இல்லையே. நீங்கள் வைக்கும் ஆபாசமான தலைப்புக்களுக்கு வாசகர்கள் வரத்தான் செய்வார்கள். அதற்காக அதை அவர்களின் அங்கீகாரமாக கொள்ளமுடியாது
அடுத்ததாக செய்திகளை தாம் ஊடகமாக வெளியிடுவதில்லை. வாசகர் போலவே செய்திகளை தருகிறோம் என்று கூறியிருந்தார்கள். இதற்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பாடசாலைக்கு செல்ல பஞ்சிப்படும் குழந்தைபிள்ளை தலையில் கை வைத்துக்கொண்டு “அம்மா வயித்துக்குத்து” என்று சொல்வது போலுள்ளது இந்த விளக்கம். இன்னுமொன்று சொல்லியிருந்தார்கள். இதுபோன்றதொரு ஆபாசமான செய்தியை உதயன் பத்திரிகை விளம்பரம் கிடைக்காது என்ற காரணத்தால் போடவில்லையாம். எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான விளக்கம். ஊடகம் என்றால் ஆபாசச்செய்திகளை மட்டுமே பிரசுரிக்கவேண்டும் என்பதே இவர்களின் வரைவிலக்கணம்.
* உதயன் பத்திரிகையில் அதிக இலாபமீடியபோதும் பணியாளர்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுவதாக சாடியிருந்தார்கள். இவர்கள் எத்தனை பதிவர்களின் பதிவுகளை காப்பி செய்கிறார்கள். அந்த பதிவர்களுக்கு இவர்கள் என்ன கொடுக்கிறார்கள். இவர்களுடைய மானத்தை விற்று பிழைக்கும் மாத வருமானம் எவ்வளவு தெரியுமா? அறிய இங்கே click பண்ணுங்கள்
இதற்கு மேல் அவர்கள் கூறியது எல்லாமே சிறு பிள்ளைத்தனமான வாதங்கள். உண்மையிலே இவர்கள் ஒழுங்கானவர்களாக இருந்தால் சுதந்திர ஊடக அமைப்பின் கருத்துக்குத்தான் மறுப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டிருக்கவேண்டுமே தவிர உதயன் பத்திரிகையயோ, சரவணபவன் மீதோ தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் செய்திருக்கக்கூடாது. அதிலிருந்தே அவர்களின் வக்கிர குணம் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது.

இதே போல்தான் TamilCNN தளமும் உதயன் பத்திரிகை மீதும் சரவணபவன் மீதும் அருவருக்கத்தக்க வகையில் தனிமனித தாக்குதலையே நடத்தியிருக்கிறது. சொந்தமாக எதையும் எழுத வக்கில்லாதவர்கள் தம் பிழை பிடிபட்டதும் சீறிப்பாய்கிறார்கள்.
உறவுகளே நீங்களே சொல்லுங்கள். யாழ்மக்களை பகிரங்கமாக மானபங்கப்படுத்தும் இப்படியான தளங்களை எதிர்ப்பது தவறா? அப்படி எதிர்த்தால் அவர்கள் தேசத்துரோகிகளா?
ஆனால் ஒன்று. இப்படியான தளங்களுக்கு ஒன்று சொல்கிறேன். எம் மக்கள் உங்களை துரத்தியடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை இந்த கட்டுரை  சிறகுகள் இணையத்தில் பிரசுரமாகியது  சிறகுகள் இணையம்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls